×

பறக்கும் படை அதிகாரிகளின் கெடுபிடியால் மாட்டுச்சந்தையில் வியாபாரம் பாதிப்பு

ஈரோடு, ஏப். 5: ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் கெடுபிடியால் மாட்டு சந்தையில் நேற்று வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இருநாட்கள் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று கூடிய சந்தைக்கு தேனி, மதுரை, சேலம், நாமக்கல், திருப்பூர், திருச்சி, தென்காசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 30 கன்றுகள், 200 எருமைகள், 250 பசு மாடுகள், 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறையால் இதுவழக்கத்தை விட குறைவானதாகும். இதனால், வியாபாரமும் மந்தமாக நடைபெற்றது.

இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறையால், மாடுகளை வாங்கவும், விற்கவும் வர முடியவில்லை. மாட்டை விற்று, வாங்கிய பணத்துக்கு என்ன ஆவணத்தை காண்பிப்பது, மாட்டுச்சந்தை வாசலிலும், காவிரி ரோட்டில், வாய்க்கால் பாலத்திலும் அதிகாரிகள் நின்றுகொண்டு சோதனையிட்டு, பணத்தை பறிமுதல் செய்கின்றனர். இதனால், வியாபாரிகள் இந்த வாரம் மிகக் குறைவாகவே வந்தனர்.கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில், மாட்டு வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகம் செய்வோரை பிடித்து இப்படியெல்லாம் நெருக்கடி கொடுப்பதில்லை. இந்த நெருக்கடி காரணமாக 600க்கும் குறைவான மாடுகளே வந்தன. நேற்று வரத்தான மாடுகளில் 70 சதவீத மாடுகள் கூட விற்கவில்லை. வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால், அதுவரை இதே நிலை தான் நீடிக்கும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பறக்கும் படை அதிகாரிகளின் கெடுபிடியால் மாட்டுச்சந்தையில் வியாபாரம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Election Flying Squad ,Karungalpalayam ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது